அடுத்த 3 மணி நேரத்திற்கு… 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஒரு சில மாவட்டங்களில் லேசான இடி மின்னல், காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையின் பெரும்பாலான பகுதிகளிலும் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில், கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : ‘தி கோட்’ திரைப்பட சுவரொட்டிகளில் தவெக கட்சி பெயரை பயன்படுத்த வேண்டாம் என நிர்வாகிகளுக்கு கட்சி சார்பில் அறிவுறுத்தல்!
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான இடி மின்னல் மற்றும் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மிதமான மழை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது.