கன்னியாகுமரி: விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி!
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். இந்த நேரத்தில், கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் அமைந்துள்ள கடற்பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 7வது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் நாளை (ஜுன் 1) நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் மற்றொரு தொகுதியான வாரணாசி தொகுதியிலும் நாளை தேர்தல் நடைபெற உள்ளது.
7ம் கட்டத் தேர்தலுக்கான பரப்புரை முடிவடைந்த நிலையில், வாரணாசியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு வந்த பிரதமர் மோடி அங்கிருந்து MI-17 வகை ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். கடல் நடுவே இருக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலை இருக்கும் மண்டபத்தில் நேற்று மாலை தியானத்தை தொடங்கினார். இந்த தியானம் நாளை வரை தொடரும். அதன்பின் நாளை (ஜூன் 1) பிற்பகல் 3.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, மாலை 4.05 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்வு குறித்த செய்திகளை உடனுக்குடன் வழங்க களத்தில் நமது செய்தியாளர் சுடலைக்குமார் உள்ளார். அவர் சேகரித்த தகவல்களை காண...