கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் களைகட்டிய #Onam! பாரம்பரிய உடை அணிந்து மக்கள் கொண்டாட்டம்!
ஓணம் பண்டிகையையொட்டி, இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும்
சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் அத்த பூ கோலமிட்டு, சிறப்பு பூஜைகள்
நடைபெற்றது.
கேரளாவின் அறுவடை கால பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை இன்று
கொண்டாடப்படுகிறது. அஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி, பத்தாவது நாளான திருவோண
நட்சத்திரத்தன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரளாவை ஆட்சி செய்து
மக்களிடையே நன்மதிப்பைப் பெற்ற, மகாபலி மன்னன் ஓண பண்டிகை அன்று நாட்டு மக்களை
காண வருவதாக கேரள மக்களிடையே ஐதீகம் உள்ளது. அவரை வரவேற்பதற்காகவே விதவிதமான மலர்களால் அத்தப்பூ கோலம் இட்டு, 64 வகையாக ஓணம் சத்யா விருந்து படைத்து,
விளையாட்டு போட்டிகள், ஆட்டம், பாட்டத்துடன் இந்த ஓணம் நாள் கொண்டாடுவது
வழக்கம்.
ஆனால் கேரளாவில் வயநாடு நிலச்சரிவினால் ஏராளமான உயிர்கள் பலியானது.
இதற்காக அம்மாநில அரசு சார்பில் நடைபெறும் ஓணம் நிகழ்ச்சிகளை ரத்து
செய்தது. இந்நிலையில் கேரள மாநிலத்தை ஒட்டிய கன்னியாகுமரி பகுதிகளில் ஓணம் பண்டிகை களைகட்டியது. இப்பகுதிகளில் கேரள மக்கள் அதிகமானோர் வசிக்கிறார்கள்.
இன்று அதிகாலை தங்கள் வீட்டின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாடினர். அதேபோன்று நாகர்கோவிலில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
நாகர்கோவில் கிருஷ்ணன் கோயிலில் உள்ள ஆதிபராசக்தி பீடத்தில் பெண்கள் கேரள
பாரம்பரிய உடை அணிந்து, அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாடினர். மேலும்
ஒருவருக்கு ஒருவர் ஓணம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.