கன்வார் யாத்திரை - மசூதிகளை மறைத்திருந்த திரைச்சீலைகள் நீக்கம்!
உத்தரப்பிரதேசத்தில் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் இருந்த மசூதிகள் திரைச்சீலைகளால் மறைக்கப்பட்டிருந்த நிலையில், பெரும் சர்ச்சைகளுக்கு பின்னர் தற்போது அந்த திரைச்சீலைகள் நீக்கப்பட்டுள்ளன.
கங்கையையொட்டிய புண்ணியத் தலங்களுக்கு நடைப்பயணமாக சென்று, அங்கு கலசங்களில் நீரை சேகரித்து, தங்களது ஊரில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்கான கன்வார் யாத்திரை (காவடி யாத்திரை), வடமாநிலங்களில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு கன்வார் யாத்திரை கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, கன்வார் யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள உணவகங்கள் தங்களுடைய உரிமையாளர்கள் பெயர், உணவகங்களில் பணிபுரியும் நபர்களின் பெயர்கள் மற்றும் இதர விவரங்களை வெளியிட வேண்டும் (காண்பிக்க வேண்டும்) என உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்ட காவல்துறை உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து உத்தரகாண்ட், மத்திய பிரதேச மாநிலத்திலும் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. காவல்துறையின் இந்த உத்தரவானது கடை வைத்திருக்கும் முஸ்லிம் வணிகர்களை குறிவைத்து பிறப்பிக்கப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து இதுதொடர்பாக முஸ்லிம் வணிகர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
उत्तराखंड : हरिद्वार में प्रशासन के 'मौखिक आदेश' पर कांवड़ मार्ग पर पड़ने वाली मस्जिदों को सफेद कपड़े से ढक दिया गया था। अब फजीहत होने पर ये पर्दे हटाए जा रहे हैं... pic.twitter.com/dfxGIs0Onp
— Sachin Gupta (@SachinGuptaUP) July 26, 2024
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 22-ந்தேதி பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. அத்துடன் உத்தரவை எதிர்த்து போடப்பட்டுள்ள மனு தொடர்பாக விளக்கம் அளிக்கவும் நீதிமன்றம் ஆணையிட்டது. மேலும் இன்று நடைபெற்ற விசாரணையிலும் இந்த இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள ஒரு மசூதி மற்றும் கல்லறையை திரைச்சீலைகளால் மூட உத்தரகாண்ட மாநிலம் ஹரித்வார் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் தற்போது அந்த திரைச்சீலைகளை நீக்க உத்தரகாண்ட மாநிலம் ஹரித்வார் நிர்வாகம் ஆணையிட்டுள்ளது. இதேபோன்று உத்தரப் பிரதேசம் ஆர்யநகர் அருகே உள்ள இஸ்லாம்நகர் மசூதியையும், அப்பகுதியில் உள்ள உயரமான பாலத்தின் மேல் இருக்கும் ஒரு கோவில் மற்றும் மசூதியையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.