காணும் பொங்கல் - தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
காணும் பொங்கல் தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜன.17) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கோயில்கள், பூங்காக்கள், கடற்கரைகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவர். இதன் காரணமாக முக்கிய சுற்றுலாத் தலங்களில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனுடன் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 15,500 காவலர்கள், 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மெரினா கடற்கரையில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள், காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவசர ஊர்திகள், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மீட்பு பணிக்காக மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த 200 தன்னார்வலர்கள் மெரினாவில் தயார் நிலையில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: நடிகர்கள் சூரி, அருண் விஜய், இயக்குநர் ஏ.எல்.விஜய் பார்வையிட்டனர்!
இதனுடன் இந்த முறை குழந்தைகளின் பாதுகாப்பில் போலீசார் அதிக கவனம் செலுத்தி உள்ளனர். அதன்படி மக்கள் அதிகம் கூடுவதால் குழந்தைகள் காணாமல் போவதை தடுக்கும் வகையில் சென்னை மாநகர போலீசார் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளனர். அதன்படி கடற்கரைக்கு குழந்தைகளுடன் செல்லும் பெற்றோர் இந்த அடையாள
அட்டையை குழந்தைகளின் கைகளில் ஒட்ட அனுமதிக்க வேண்டும்.
அதில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் பெற்றோர் கைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் எழுதப்பட்டு இருக்கும். இதன்மூலம் குழந்தைகள் காணாமல் போனால் அதில் உள்ள விபரங்கள் அடிப்படையில் எளிதாக குழந்தைகளை பெற்றோருடன் சேர்க்க முடியும்.