#Kanniyakumari | வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு!
கன்னியாகுமரியில் வருகிற டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாள்கள் வள்ளுவர் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் வானுயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,
“கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து கால் நூற்றாண்டு ஆகிறது. அந்த வகையில் வெள்ளி விழா காண்கிறது வள்ளுவர் சிலை. இதனைக் கொண்டாடும் விதமாக, வருகிற டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாள்கள் வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சாதி, மத பேதங்களைக் கடந்து 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று கூறியவர் வள்ளுவர். ஆனால் வள்ளுவருக்கே காவிச் சாயம் பூச ஒரு கும்பல் நினைக்கிறது.
வள்ளுவர் எல்லாருக்கும் பொதுவான தமிழர்களின் அடையாளம். இதனை முழங்கும் விதமாக டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாள்கள் வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட உள்ளது. மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள், திருக்குறளின் பெருமைகளை உணர்த்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மாவட்ட வாரியாகவும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.