கண்ணகி - முருகேசன் கொலை வழக்கு | குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் முருகேசன். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த முருகேசன் பி.இ பட்டதாரி. இவரும், அதேபகுதியில் வசித்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகள் கண்ணகியும் காதலித்து வந்தனர். இதனையடுத்து, இவர்கள் இருவரும் கடந்த 2003 மே 5ம் தேதி பதிவு திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களின் காதல் திருமணம் குறித்து கண்ணகியின் பெற்றோருக்கு தெரியவர, இதனால் ஏதேனும் பிரச்னை வரும் என முருகேசன் எண்ணினார்.
இதனால், கண்ணகியை மூங்கில்துறைப்பட்டிலுள்ள அவரது உறவினர் வீட்டில் முருகேசன் மறைத்து வைத்தார். ஆனால், அவர்கள் இருந்த இடத்தை கண்ணகியின் பெற்றோர் எப்படியோ தெரிந்துக் கொண்டனர். காதல் திருமணம் செய்ததால் பெண்ணின் மீது ஆத்திரத்தில் இருந்த கண்ணகியின் பெற்றோர் கடந்த 2003 ஜூலை 8ம் தேதி கண்ணகி மற்றும் முருகேசனை விருத்தாசலம் வண்ணாங்குடிகாட்டிலுள்ள மயானத்திற்கு இழுத்து சென்றனர். அங்கு, அவர்கள் தம்பதி இருவரின் காது மற்றும் மூக்கில் விஷம் ஊற்றி கொலை செய்தனர். பின்னர் இருவரின் உடலையும் தனி தனியாக எரித்தனர்.
இச்சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள் விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் முதலில் வழக்கை பதிவு செய்ய காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அப்போதிருந்த அரசியல் அழுத்தம் காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் 2004ம் ஆண்டு வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டதாக தெரிகிறது.
கடந்த 2004ம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. அதில், 2003ல் முருகேசனின் உறவினர்கள் புகார் அளித்த போது விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் 36 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர்.
பின்னர் பல ஆண்டுகளாக கடலூர் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கண்ணகியின் தந்தை துரைசாமி, கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டி, அய்யாச்சாமி ரங்கசாமி, கந்தவேலு ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாப்புலி, ராமதாஸ், சின்னதுரை, அப்போது ஆய்வாளராக இருந்த செல்லமுத்து, உதவி ஆய்வாளராக இருந்த தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரில் 13 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் அய்யாச்சாமியும், குணசேகரனும் குற்றவாளி இல்லை என்று வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு மரண தண்டனையும், மற்ற அனைவருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த வழக்கை சரியாக விசாரிக்காத காவலர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
தண்டனை பெற்றவர்கள் கடலூர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். சென்னை உயர்நீதிமன்றம் இந்த மனு தொடர்பான விசாரணையை நடத்தி 2022ல் தீர்ப்பு வழங்கியது. அதில், கண்ணகியின் அண்ணன் மருது பாண்டிக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. கண்ணகியின் தந்தை துரைசாமி உட்பட 12 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து, ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட கண்ணகியின் உறவினரான கோ.கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதி சுதான்சு துலியா தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இதன் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து குற்றவாளிகளுக்கான ஆயுள் தண்டனைனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.