கன்னட மொழியில் இல்லாத வர்த்தக நிறுவன பெயர் பலகைகள் அடித்து நொறுக்கிய கன்னட அமைப்பினர்!
பெங்களூரில் வணிக கடைகளின் பெயர் பலகையில் 60% கன்னட மொழி கட்டாயம் என்ற உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, மாற்று மொழி கடைகளின் பெயர் பலகைகளை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூருவில் வணிக கடைகளின் பெயர்களில் 60% கன்னடத்திலும், 40% ஆங்கிலத்திலும் இடம்பெற அனுமதித்து புருஹாத் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் (பிபிஎம்பி) உத்தரவிட்டிருந்தது. வரும் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால், வணிக நிறுவனத்தின் அனுமதி உத்தரவு ரத்து செய்யப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வணிக பெயர் பலகை 60% கட்டாயம் கன்னடத்தில் இடம் பெற வேண்டும் என்ற உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கன்னட அமைப்புகள் இன்று பேரணி அறிவித்தன. கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்புடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு புருஹாத் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் இந்த உத்தரவை வெளியிட்டது. கன்னடத்தில் பெயர் பலகை கட்டாயம் என்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி கன்னட ஆதரவு அமைப்புகள் இன்று காலை பேரணி சென்றன.
அப்போது, கன்னட கொடியுடன், அமைப்பின் மஞ்சள் நிற துண்டு அணிந்திருந்த போராட்டக்காரர்கள் ஆங்கிலத்தில் பெயர் பலகை இருந்த ஓட்டல், சலூன் கடைகள், ஸ்பா உள்ளிட்ட கடைகளின் பெயர் பலகை மற்றும் முகப்பு பகுதியில் தாக்குதல் நடத்தினர். மேலும், மாற்று மொழி பெயர் பலகையில் ஸ்பிரே மற்றும் கருப்பு நிற பெயின்டுகளால் அழித்தனர்.
கன்னட அமைப்பினர் கடைகளின் பெயர் பலகைகளை சேதப்படுத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன. இச்சூழலில் அங்கு மீண்டும் கன்னட மொழி குறித்து போராட்டம் வெடித்துள்ளது.