ஆளுநர் குறித்த கனிமொழி பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதல் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக நாடாளுமன்றம் இன்று கூடியது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை உறுப்பினர்கள் உரையாற்றினர். அந்த வகையில் நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி ஆளுநர் குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் நடத்த IT, CBI மற்றும் ED ஆகியவற்றை பயன்படுத்தி வந்தது. தற்போது புதியதாக ஆளுநர் என்னும் புதிய ஆயுதத்தை பயன்படுத்துகின்றனர் என கனிமொழி விமர்சித்தார். இதனையடுத்து ஆளுநர் தொடர்பான கருத்துக்களை முன்வைக்க மக்களவையில் அனுமதி மறுக்கப்பட்டது.
ஆளுநர் குறித்து பேசியதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கனிமொழி பேச்சின் ஒரு பகுதி அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும் என சபாநாயகர் அறிவித்தார். தொடர்ந்து ஆளுநர் குறித்த கனிமொழியின் பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. பிறகு கனிமொழி எம்பி தனது உரையை முடிக்கும்போது, “திமுக அரசு பிரித்தாளுவதில்லை, திமுக அரசு அனைவரையும் சமமாக நடத்தும். திமுக அரசு அனைவரையும் அரவணைத்துச் செல்லும். திமுக அரசிடம் அனைவரையும் அரவணைத்துச் செல்வது எவ்வாறு என்பதை கற்றுக்கொள்ளுங்கள். இது ஒரே நாடு, சிதைத்துவிடாதீர்கள்” என்று கூறிவிட்டு உரையை நிறைவு செய்தார்.