நாடாளுமன்றத்தில் மொழிக் கொள்கை குறித்து விவாதிக்கக் கோரி கனிமொழி எம்.பி. நோட்டீஸ்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆம் அமர்வு தொடங்கியிருக்கும் நிலையில், நேற்று(மார்ச்.10) புதிய தேசிய கல்வி கொள்கை குறித்தும் தமிழ்நாட்டு கல்விக்கான நிதிப் பகிர்வு பற்றியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், PM Shree திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு தயாராக இருந்துவிட்டு மீண்டும் அரசியல் செய்கிறார்கள் என்றும் நாகரீகமற்றவர்கள் என்றும் தமிழ்நாடு எம்.பி.-க்களை விமர்சனம் செய்தார்.
அவரின் பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி-க்கள் கண்டனம் தெரிவித்தனர். பின்பு தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக எம்.பி. கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கினார். இதனிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தர்மேந்திர பிரதானுக்கு நாவட்டக்கம் வேண்டும் என்று கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் மொழிக் கொள்கை குறித்து விவாதிக்கக்கோரி நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. நோட்டீஸ் அளித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று(மார்ச்.11) காலை திமுக எம்.பி.க்கள் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.