பெண்கள் தலைமையிலான #StartUpகளின் விவரங்களை வெளியிட வேண்டும் - மத்திய அரசுக்கு கனிமொழி எம்பி கோரிக்கை!
பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்-அப்களின் விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. அதானி விவகாரம், சம்பல் கலவரம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை கண்டித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் இன்றைய நாடாளுமன்ற நிகழ்வுகளில் திமுக எம்பிக்கள் வைத்த கோரிக்கைகளை விரிவாக காணலாம்.
திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி கோரிக்கை :
இந்தியாவில் மொத்தம் உள்ள பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி கோரிக்கை வைத்தார். தமிழ்நாட்டில் பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் எந்தெந்த தொழில்துறைகளில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் ஊக்குவிப்புத் துறையின்கீழ்(DPIIT) பதிவு செய்யப்பட்டுள்ளது எனும் தகவல் வெளியிட வேண்டும் எனவும் இந்நிறுவனங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை SC, ST மற்றும் OBC பிரிவுகளின் அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல இத்திட்டத்தின்கீழ் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு இதுவரை தமிழ்நாட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிறுவனங்களின் விவரங்களை வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்த அவர், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் நிரந்தரமான வளர்ச்சியை உறுதிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள், நிதி, தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகளை அணுகுவதில் பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களை அரசு ஆய்வுசெய்யவும் அவற்றை எதிர்கொள்ள எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கோரிக்கை
ஆறு சதவிகித ஊதிய உயர்வோடு 100 நாட்கள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என திமுக எம்.பி. கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். கிராமப்புற மக்கள் குறிப்பாக பெண்கள் பயன்பெறும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஸ்வச்- பாரத், பிரதமரின் அனைவருக்கும் வீடு மற்றும் பல கிராமப்புற மக்கள் மேம்பாட்டு திட்டங்களின் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர், SC/ST/OBC மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கான வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் திட்டங்களை ஒன்றிய அரசு உருவாக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
- திமுக எம்.பி. செல்வகணபதி
உலகின் கச்சா எஃகு உற்பத்தியில் இந்தியா இரண்டாவது வகிக்கிறது எனும் தகவலின் உண்மை நிலவரம் குறித்து திமுக எம்.பி. செல்வகணபதி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதேபோல் கடந்த மார்ச் வரையிலான நிதியாண்டில் உலோகக் கலவையின் நிகர இறக்குமதியாளராகவும் இந்தியா இருந்துள்ளதா எனவும் அவர் கேள்வி கேட்டார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆயத்த எஃகு இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் உச்சத்தை எட்டியிருக்கிறது மற்றும் கடந்த ஆறு ஆண்டுகளில் மொத்தம் இறக்குமதி செய்யப்பட்ட ஆயத்த எஃக்கின் உச்சமாக நடப்பாண்டில் 3.7 மில்லியன் மெட்ரிக் டன்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது எனும் செய்திகளின் உண்மைத்தன்மையையும் விளக்கவும் கோரிக்கை வைத்த அவர் உள்நாட்டு எஃகுத் தொழிலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய எஃகு சங்கம் ஒன்றிய அரசிடம் கோரியுள்ளதா, ஆம் என்றால் அதன் அடிப்படையில் அரசு எடுத்த நடவடிக்கை பற்றிய விவரங்களையும் வெளியிடக் கேட்டுள்ளார்.
திமுக எம்.பி. டாக்டர். கலாநிதி வீராசாமி குற்றச்சாட்டு
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட நிதி உதவி போதுமானதாக இல்லை என தொடர்ந்து விவசாயிகள் கோரிவருவது குறித்து அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
விவசாய கச்சாப் பொருட்களின் விலை உயர்வு கணக்கில் கொண்டும் மற்றும் விவசாய குடும்பங்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் அரசின் நிதி பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் அதற்குரிய ஆய்வுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தன் அறிக்கையில் கேட்டுள்ளார்.
மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் தற்போதைய நிதி உதவியின் தாக்கத்தை அறிந்துகொள்ளும் வகையில் அரசாங்கம் விவசாயிகளுடன் ஏதேனும் ஆய்வுகள் அல்லது ஆலோசனைகளை நடத்தியிருந்தால் அதுகுறித்த தகவல்களை வெளியிட வேண்டும் மற்றும் தொடர்ந்து விவசாயிகள் சந்திக்கும் இடையூறுகள் குறித்த விரிவான மதிப்பாய்வு செய்துமுடிக்க அரசு நிர்ணயித்திருக்கும் காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
- திமுக எம்.பி. முரசொலி
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டத்தின்கீழ் தஞ்சாவூரில் பயனடைந்தவர்களின் பட்டியல், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதித்தொகையின் விவரம் மற்றும் தற்போது மத்திய அரசுக்கு நிதியை உயர்த்தும் திட்டம் ஏதேனும் இருந்தால் அது குறித்த விவரங்களை வெளியிடுமாறு திமுக எம்.பி. முரசொலி நாடாளுமன்றத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரை கேட்டுள்ளார்.
திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழ்நாட்டில் கூட்டுறவுகளை வலுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளின் விவரங்கள் மற்றும் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் கேட்டுள்ளார்.
- திமுக எம்.பி. ஆ. ராசா
தேயிலை மற்றும் காபி போன்ற பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) நீட்டிப்பதற்கான கோரிக்கைகள் பெறப்பட்டிக்கின்றதா என திமுக எம்.பி. ஆ. ராசா கேட்டுள்ளார். மேலும் இடைத்தரகர்களினால் தேயிலை மற்றும் காபி தொழில் முனைவோர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேநீர், காபி போன்றவற்றின் MSP அதில் அச்சிடப்படுமா எனும் விவரங்களையும் வெளியிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.