ஐசிசி மகளிர் U19 டி20 உலகக்கோப்பை வெற்றி - இந்திய அணிக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து!
19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் ஐசிசி உலக்கோப்பை இறுதிபோட்டி
கோலாலம்பூரில் இன்று நடைபெற்றது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்று கோப்பையை வென்றது. U-19 மகளிர் ஐசிசி உலக்கோப்பை தொடரை தொடர்ந்து 2 ஆவது முறையாக வென்று இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணியினருக்கு அரசியல் தலைவர்கள், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தற்போதைய இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “வரலாற்று சிறப்புமிக்க உலக சாம்பியன்ஷிப் வெற்றியைப் பெற்ற இந்திய மகளிர் U-19 கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். உங்களின் திறமையும், மன உறுதியும் நாட்டை பெருமைப்படுத்தி உள்ளது. இந்த வெற்றி இந்தியா முழுவதும் உள்ள இளம் விளையாட்டு வீரர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.