தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் கனிமொழி போட்டி? - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொன்ன தகவல்!
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தான் மீண்டும் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “வருகிற மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி கருணாநிதியை தான் நிச்சயமாக திமுக வேட்பாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். இதை உறுதிப்படுத்தும் வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘தூத்துக்குடியில் நிற்பது கனிமொழி அல்ல கலைஞர் தான்’ என்று கூறியுள்ளார். ஆதலால் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடப் போகும் கனிமொழி கருணாநிதியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த பேச்சால் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் கனிமொழியே வேட்பாளராக போட்டியிடுவது உறுதியாகிள்ளதாகவும், வேட்பாளர் தொடர்பான குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.