கங்கனா ரனாவத்தின் #Emergency திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல்!
கங்கனா ரனாவத் நடித்துள்ள 'எமர்ஜென்சி' படத்தில் சீக்கிய சமூகத்தை தவறாக சித்தரித்ததாக பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி வரும் எமர்ஜென்சி படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தை செப்டம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். தணிக்கை வாரியத்திடம் இருந்து படத்திற்கு இன்னும் கிரீன் சிக்னல் கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கங்கனா படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இன்னும் 10 நாட்களில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்த படம் தொடர்பாக தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று தணிக்கை வாரியத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் கங்கனா ரணாவத் தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பதிவிட்டிருந்தார்.
பஞ்சாப் கலவரக் காட்சிகள் மற்றும் பிந்த்ரன்வாலே தொடர்பான காட்சிகளை படத்தில் இருந்து நீக்கவேண்டும் என்று தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும் சென்சார் போர்ட் அதிகாரிகளுக்கும் இதுபோன்ற மிரட்டல் வருவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்திரா காந்தி வேடமேற்று கங்கனா ரனாவத் நடித்துள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக படக்குழுவை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தாங்கள் குறித்த தேதியில் படம் ரிலீசாகும் வகையில் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால், அதற்காக நீதிமன்றத்தில் போராடுவும் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.