கங்கனா ரனாவத் நடித்த தேஜஸ் படம் படுதோல்வி; 60 கோடி செலவில் எடுக்கப்பட்டு வெறும் ரூ.4 கோடி மட்டும் வசூலித்த சோகம்...
60 கோடி செலவில் எடுக்கப்பட்ட தேஜஸ் ரூ.4 கோடி மட்டும் வசூலித்து படுதோல்வி அடைந்துள்ளது.
சிறப்பான நடிகை என பெயர் எடுத்து இரண்டு தேசிய விருதுகளை வென்ற கங்கனா ரனாவத் நடிப்பில் அக்டோபர் 27ந் தேதி தியேட்டரில் வெளியான படம் தேஜஸ். சர்வேஷ் மேவாரா எழுதி இயக்கிய இப்படத்தில் அன்ஷுல் சவுகான் மற்றும் வருண் மித்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தியாவின் போர் விமானத்திற்கு தேஜாஸ் என்று பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயர் சூட்டினார். அந்த போர் விமானத்தில் சாகசம் செய்யும் போர் விமானியாக நடிகை கங்கனா ரனாவத் இத்திரைப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மிகுந்த பொருட் செலவில் வெளியான இத்திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் படு மோசமான வசூலை பெற்றுள்ளது.
தேஜஸ் திரைப்பட அனைத்து இடத்திலும் காற்று வாங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகாரில் பிரபலமான ஒரு தியேட்டரில் ஒரு டிக்கெட் கூட விற்பனை ஆகவில்லை. 60 கோடி செலவில் எடுக்கப்பட்ட தேஜஸ் ரூ.4 கோடி மட்டும் வசூலித்துள்ளது. இன்னும் சில தியேட்டர்களில், 5 பேர், 10 பேர் மட்டுமே வருவதால் பல தியேட்டர்கள் காட்சிகள் ரத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், உத்திரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் லக்னோவில் சிறப்பு காட்சியாக இப்படத்தை பார்த்து விட்டு நெகிழ்ச்சியில் கண்கலங்கினார் என்று கங்கனா தெரிவித்திருந்தார். மேலும் இப்படம் பெண்களின் முன்னேற்றத்திற்கான படம் இல்லை. பெண்களின் சக்தியை தெரிந்து கொள்வதற்கான படம் என்று பாராட்டியதாக கங்கனா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
தி குயின் ஆஃப் ஜான்சி திரைப்படத்தை இயக்கிய ரணாவத், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான எமர்ஜென்சி படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படம் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. இவர் தலைவி படத்தில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் பாத்திரத்தில் நடித்தார், அதன் பிறகு 'மணிகர்ணிகா' படத்தில் ஜான்சியின் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி லட்சுமி பாயாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.