‘கண்டுணர் சுற்றுலா’ - உழவர்களுக்கு ஊக்கமளிக்கும் தமிழ்நாடு அரசின் விவசாயத் திட்டங்கள்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். இதில் இயற்கை விவசாயம், உழவர்களுக்கு ஊக்கமளிக்கும் பல திட்டங்களையும், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விரிவாக்கங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் சிலவற்றை இங்கு காண்போம்.
1. மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டம் 1 லட்சத்து 87 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 79 ஆயிரம் உழவர்கள் பயனடையும் வகையில் சுமார் ரூ.40 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
2. நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு ஆகிய பயிர்களின் பரப்பினை அதிகரிக்கும் பொருட்டு ‘எண்ணெய் வித்துகள் இயக்கம்’, 2.16 லட்சம் ஏக்கர் பரப்பில் ரூ.108.06 கோடி மத்திய, மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
3. இயற்கை வேளாண்மையைப் பரவலாக்கம் செய்திடும் விதமாக பல்வேறு செயல்பாடுகள் தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் மொத்தம் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும்.
4. தமிழ்நாட்டில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 38600 மாணவர்கள் உயிர்மெய் வேளாண் பண்ணைகளுக்கு கண்டுணர் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
5. நெல் உற்பத்தித் திறனில் அதிக சாதனை அடைந்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் உயரிய தொழில்நுட்பங்களை நேரடியாகச் சென்று கண்டுணர்ந்து, அத்தகைய தொழில்நுட்பங்களைத் தங்கள் வயல்களில் செயல்படுத்திடும் விதமாக, 100 முன்னோடி உழவர்கள் ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்குக் கண்டுணர் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்; இதற்கென ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும்
6. ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு உழவர்களுக்கு நடைமுறையில் உள்ள 40 முதல் 50% மானியத்திற்குப் பதிலாக 60 முதல் 70% மானியம் வழங்கப்படும்; இதற்காக ரூ.21 கோடி நிதி மாநில நிதி ஒதுக்கப்படும்.
7. நவீன வேளாண் கருவிகள், நவீன சாகுபடித் தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து கடைப்பிடிப்பதில் சிறந்து விளங்கும் 3 நபர்களுக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சமும், 2 ஆம் பரிசாக 1.50 லட்சமும், 3 ஆம் பரிசாக 1 லட்சமும் வழங்கப்படும்.
8. சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருது வழங்கும் திட்டம். 2025-26 ஆம் ஆண்டிலும் 3 உழவர்களுக்கு பாராட்டுப் பத்திரத்துடன் தலா ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.