கந்த சஷ்டி திருவிழா - கனிப்பந்தல் அமைப்பு! பக்தி பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள்!
சஷ்டி திருவிழாவில் பக்தர்களின் வரப்பிரசாதமான, வேண்டிய வரத்தை கொடுக்கும்
கனிப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், உலகப் புகழ்பெற்ற கந்த சஷ்டி திருவிழா
கடந்த 2ஆம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கி, வெகுவிமர்சையாக நடைபெற்று
வருகிறது. விழா தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நான்காம் நாளான இன்று அதிகாலை விஸ்வரூப தீபாராதனை நடைப்பெற்றது. தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதில், திரளானோர் பங்கேற்று முருகப் பெருமானை வழிபட்டுச் சென்றனர். தொடர்ந்து கோயில் சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கனிப்பந்தலில் ஆப்பிள், அண்ணாச்சி பழம், மாதுளை வாழைப்பழம், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு பழங்கள் கட்டப்பட்டுள்ளது.
யாகசாலை பூஜை நடைபெற்றபின், சுவாமி ஜெயந்திநாதர், தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி கனிப்பந்தல் வந்து சண்முக விலாசம் மண்டபத்தில், பக்தர்களுக்கு காட்சி கொடுத்து கனிகளுக்கு அருள் பாலிப்பார். தொடர்ந்து பக்தர்களுக்கு கனிப்பந்தலில் உள்ள பழங்கள் பிரசாதமாக வழங்கப்படும். இந்த பழங்களை சாப்பிடும் பக்தர்கள் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் குழந்தை வரம் வேண்டி விரதம் இருக்கும் பெண் பக்தர்கள் இந்த பழங்களை பிரசாதமாக சாப்பிடும் போது அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும், அதுபோன்ற அதிசயங்கள் நடந்திருப்பதாகவும் பெண் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கூறுகின்றனர்.
.