காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில் வைகாசி திருவிழாவையொட்டி, தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில் வைகாசி திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து, கடந்த 22-ம் தேதி பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். இந்த நிலையில் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
முன்னதாக கொண்டை முடிச்சு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் வரதராஜ பெருமாள் இன்று அதிகாலை தேரில் எழுந்தருளினார். தேரில் அமர்ந்திருந்த பெருமாளை பக்தர்கள் ஏறிச் சென்று பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறு மற்றும் சிறு தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
இத்தேரோட்ட விழாவில் காஞ்சிபுரம் எம்.பி கா.செல்வம், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், அறநிலையத்துறை இணை ஆணையர் ரா.வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன், மக்கள் நீதி மையத்தின் மாநில செயலாளர் எஸ்.கே.பி.கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன், அதிமுக மக்களவைத் தொகுதி வேட்பாளர் ராஜசேகர், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கே.யு.சோமசுந்தரம், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, எஸ்.பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
வழிநெடுகிலும் நீர்,மோர் வழங்கியதுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அங்கு காஞ்சிபுரம் சரக டிஐஜி பொன்னி, எஸ்.பி.கே.சண்முகம் ஆகியோர் தலைமையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.