ரீமேக் ஆகும் கமல்ஹாசனின் ‘சத்யா’... ஹீரோவாக நடிக்கும் அசோக் செல்வன்...
அசோக் செல்வன் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த போர் தொழில் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அவர் மீண்டும் நடிக்கவுள்ளதாகவும், கமல்ஹாசனின் ‘சத்யா’ படத்தை ரீமேக் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சத்யா, தமிழ் சினிமா கடந்து விட முடியாத திரைப்படங்களில் இது முக்கிய இடத்தில் இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் கமலஹாசனின் புதிய பரிமாணம் தான் இந்த சத்யா. சத்தியமூர்த்தியாக வாழும் சாமானிய இளைஞனின் வாழ்க்கையை எடுத்துரைப்பது இந்த கதையின் களமாகும். 1985-ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த அர்ஜுன் என்ற திரைப்படத்தின் ரீமேக் படம் தான் இந்த சத்யா.
180 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய திரைப்படம் இது. நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையை சத்ருபமாக எடுத்துரைத்த திரைப்படமாகும். இந்த படத்தில் கமலின் தோற்றம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். வேலை தேடும் இளைஞன், ஒருவர் வருமானத்தில் வாழும் குடும்பம், வரதட்சணை கொடுமை, சித்தி கொடுமை, ஒண்டி குடித்தனம், அநீதிகளைக் கண்டு கொந்தளித்தல், நண்பர்களுடன் வாழ்க்கை, காதல் என அனைத்து விதமான பரிமாணங்களையும் ஒரே திரைப்படத்தில் எடுக்க முடியுமா என்ற கேள்வி சாத்தியமானது சத்யா திரைப்படம் மூலம் தான்.
இப்படத்தில் கமலின் கெட்டப் அப்போது இருந்த இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது வரை இருக்கும் இளம் இயக்குநர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக விளங்கி வருகிறது. சில கதைகளை விளக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல, உணர்வு ரீதியாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும் அவ்வாறு உணர்வு கலந்த சாமானியனின் சவுக்கடி தான் இந்த சத்யா. இக்கால இயக்குனர்கள் பலருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அந்த படம் இன்றளவும் திகழ்ந்து வருகிறது என்றால் அது மிகையல்ல.