#Kamalhaasan | AI-யின் உதவியால் மீண்டும் உருவாகிறதா மருதநாயகம்?
கமல்ஹாசன் தற்போது தக்லைப் படத்தை முடித்துள்ளார். இதையடுத்து கமல் மீண்டும் மருதநாயகம் படத்தை துவங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் கடந்த 1997-ம் ஆண்டு கமல்ஹாசன் போட்ட விதை தான் "மருதநாயகம்" என்கின்ற படத்திற்கான அடித்தளம். அன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதியும், அப்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்திருந்த எலிசபெத் ராணியும் இந்த திரைப்படத்தின் பூஜையில் பங்கேற்றனர்.
மிகப்பெரிய பொருட் செலவில் உலகநாயகன் கமல்ஹாசன் உருவாக்கிய இந்த படத்தில் விஷ்ணுவர்தன், சத்யராஜ், நாசர், அம்ரிஷ் பூரி, நசுருதின் ஷா உள்ளிட்ட பலர் இந்த நடிக்க ஒப்பந்தம் ஆகினர். இத்திரைப்படத்தை கமல்ஹாசன் சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பே மெகா பட்ஜெட் படமாக எடுக்க தொடங்கினார். சுமார் 30% பட பணிகளும் முடிந்து, அதற்கான ரெக்கார்டும் தன்னிடம் பத்திரமாக இருப்பதாக அதுகுறித்து அண்மையில் கமல்ஹாசன் பேசியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கமல்ஹாசன் அமெரிக்காவிற்கு சென்று ஏ.ஐ தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள இருக்கின்றார் என்ற தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்கள் பலரும் மீண்டும் மருதநாயகம் திரைப்படத்தை கமல் துவங்குவாரா? என கேள்விகேட்டு வருகின்றனர். கமலின் கனவு படைப்பான மருதநாயகம் திரைப்படம் ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டது. அதன் பிறகும் கமல் இப்படத்தை துவங்க பல முயற்சிகள் செய்தார். ஆனால் எதுவும் கைகூடவில்லை.
இதைத்தொடர்ந்து கமல் தற்போது மருதநாயகம் படத்தை மீண்டும் துவங்க தான் அமெரிக்காவிற்கு சென்று அதி நவீன தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள இருக்கின்றார் என சிலர் பேசி வருகின்றனர். ஆனால் அது உண்மையில்லையாம். அன்பறிவு இயக்கும் படத்தில் கமல் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக தான் கமல் ஏ.ஐ தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள அமெரிக்கா செல்வதாகவும் ஒரு தகவல் உலா வருகின்றது.