அதிபர் வேட்பாளருக்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் கையெழுத்து!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் கையெழுத்திட்டுள்ளார்.
கடந்த 21-ம் தேதி அன்று அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். அந்த தருணம் முதலே ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ரேஸில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸின் கை ஓங்கி இருந்தது. அவருக்கு அதிபர் பைடனும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
“துணை அதிபர் கமலா ஹாரிஸ் திறன் கொண்டவர். அவருக்கு இந்நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். தேசத்தை வழிநடத்துவதில் அனுபவம் பெற்றவர். நம் நாட்டின் சிறந்த தலைவர்களில் ஒருவர் என சொல்லும் வகையில் பணியாற்றி உள்ளார். இப்போது தேர்வு செய்யும் உரிமை அமெரிக்க மக்களிடம் உள்ளது” என அதிபர் பைடன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் இரண்டு முறை அமெரிக்க அதிபராக பணியாற்றிய பராக் ஒபாமா கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில், “கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்” என தற்போது அவரும் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை விட ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தகுதியானவர்கள் யாரும் இல்லை என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், கமலா ஹாரிஸ் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “அமெரிக்க அதிபர் பதவிக்கான எனது வேட்புமனுவை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் படிவத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளேன். ஒவ்வொரு வாக்குகளையும் பெற கடுமையாக உழைப்பேன். நவம்பரில் நடைபெறவிருக்கும் தேர்தலில், எங்கள் மக்கள் இயக்க பிரச்சாரம் வெற்றி பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.