For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு!

08:30 PM Feb 13, 2024 IST | Web Editor
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் கமல் ஹாசன். இவர் கடந்த 2018 ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். இதையடுத்து கடந்த 2019 ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டது. ஆனால் வெற்றி கணக்கை தொடங்கவில்லை.

அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. நடிகர் கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் வெற்றியின் விளிம்புக்கு சென்ற கமல்ஹாசன் கடைசியில் தோல்வியடைந்தார். கமல்ஹாசனை பாஜகவின் வானதி சீனிவாசன் வீழ்த்தினார்.

இதன்மூலம் மக்கள் நீதி மய்யத்துக்கு தமிழகசட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லாத சூழல் உள்ளது. இந்நிலையில் தான் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இத்தகைய சூழலில் தான் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் மக்கள் நீதி மய்யம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட கட்சியாக மட்டுமே உள்ளது. இன்னும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அது மாறவில்லை.

இதனால் டார்ச்லைட் சின்னம் கேட்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பான கடிதத்தில், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட்டது. அதேபோல் இந்த முறையும் கட்சிக்கு டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

Tags :
Advertisement