கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு | சென்னை டூ மதுரை நாளை சிறப்பு ரயில் இயக்கம்.. எங்கிருந்து எப்போது புறப்படும்?
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதிலும் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி, இந்தாண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனும், சுவாமியும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து, இன்று காலை திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக தங்கக்குதிரை வாகனத்தில் வீற்றிருந்து வரும் 12ம்தேதி அதிகாலை 5.45 மணிக்கு மேல் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில், சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மே 10 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 11:30 மணியளவில் புறப்படும் சிறப்பு ரயில் காலை 7.55 மணியளவில் மதுரை சென்றடையும். தொடர்ந்து, மே 12ம் தேதி மதுரையில் இருந்து இரவு 11.30 மணியளவில் புறப்படும் சிறப்பு ரயில் காலை 7.50 மணியளவில் தாம்பரம் வந்தடையும். குளிர்சாதன பெட்டிகள், சாதாரண முன்பதிவு பெட்டிகள், முன்பதிவு இல்லாத பெட்டிகள் என 20 பெட்டிகள் இந்த சிறப்பு ரயிலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.