கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் - மேலும் 7 பேருக்கு நீதிமன்றக் காவல்!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 7 பேரை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்ததில் 59 போ் உயிாிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் இந்த சம்பவம் தொடா்பாக ஏற்கனவே கருணாபுரத்தை சோ்ந்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், இவருடைய மனைவி விஜயா, சகோதரா் தாமோதரன் ஆகிய 3 பேரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினா்.
மேலும் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் விற்றதாக சின்னதுறை, ஜோசப்ராஜ், ஷாகுல் அமீது, கண்ணன், ராமர் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். அதில் புதுச்சேரி மடுகரையை சேர்ந்த மாதேஸ், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து மெத்தானல் வாங்கி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்ததும், பண்ருட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவரது கடையின் ஜிஎஸ்டி பில் மூலம் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளுக்கு பணம் அனுப்பியதும் தெரிய வந்தது. இதையடுத்து மாதேஷ் மற்றும் மெத்தனால் அனுப்பி வைத்த சென்னை மதுரவாயலை சோ்ந்த சிவக்குமாா், சக்திவேல் ஆகியோரை நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படியுங்கள் : விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு சிறையில் இருந்து வெளியேறினார்!
இந்நிலையில், சாராய விற்பனையில் தொடர்புடைய கதிரவன், தெய்வீகன், அய்யாசாமி, அரிமுத்து ஆகிய 4 பேரை நேற்று சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து தனித்தனியே விசாரணை நடத்தினர். சென்னை மாதவரம், பூங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் ஆலைகளிலிருந்து மெத்தனால் வரவழைக்கப்பட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டுவது தெரியவந்தது.
அதன் அடிப்படையில், சென்னையில் உள்ள 5 தனியார் ஆலைகளின் உரிமையாளர்கள் உட்பட 7 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், சடையன், சிவகுமார், பன்சிலால், கௌதம், ரவி, செந்தில், ஏழுமலை, உள்ளிட்ட 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.