கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு 65-ஆக உயா்வு!
விஷச்சாராய விவகாரத்தில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாபுரத்தை சேர்ந்த பெரியசாமி (40) இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மற்றும் புகர்ப் பகுதிகளில் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தியதில் கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 229 பேரும், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் நேற்று (ஜூன் 27) இரவு வரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 6 பேர், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் 22 பேர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 64 பேர் உயிரிழந்ததாக கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாபுரத்தை சேர்ந்த பெரியசாமி (40) இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மரில் பலி எண்ணிக்கை 7 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 65 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது புதுச்சேரி ஜிப்மரில் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இவர்கள் அனைவரும் சிகிச்சையில் முன்னேறி வருவதாக ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.