For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. மீண்டும் பணியமர்த்தப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!

08:48 PM Aug 13, 2024 IST | Web Editor
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்  சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ் பி  மீண்டும் பணியமர்த்தப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
Advertisement

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. சமய் சிங் மீனா தாம்பரத்தில் மீண்டும் பணியமர்த்தப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக, பாமக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

Advertisement

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அதிமுக, பாமக, பாஜக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் இன்று (ஆக. 13) விசாரணைக்கு வந்தன. அப்போது, அதிமுக வழக்கறிஞரும், அணி செயலாளருமான இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி,

“ஆண்டுதோறும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு முறையும் காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்வதை தவிர உண்மை குற்றவாளிகளை கைது செய்வதில்லை. கடந்த 1998-ம் ஆண்டு ஓசூரில் விஷச்சாராயம் குடித்து 100 பேர் பலியான வழக்கில், 16 ஆண்டுகள் விசாரணைக்கு பின் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதேபோல், கடந்த ஆண்டு விழுப்புரத்தில் நடந்த சம்பவத்துக்கு பின், காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தி, மெத்தனால் எங்கிருந்து வருகிறது என கண்டறிந்து தடுத்திருந்தால், தற்போது 68 பேர் மரணம் தடுக்கப்பட்டிருக்கும்.

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாவட்ட எஸ்.பி சமய்சிங் மீனா தற்போது தாம்பரத்தில் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார். காவல் நிலையம் அருகிலேயே கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது. எனவே, மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி இந்த வழக்கை விசாரிக்க தகுதியில்லை. மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். மெத்தனால் எங்கிருந்து வருகிறது என கண்டுபிடித்து தடுக்காவிட்டால் 2025ல் எத்தனை பேர் பலியாவார்கள் எனத் தெரியாது என்பதால் சிபிஐக்கு மாற்ற வேண்டும்” என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “மெத்தனால் எங்கிருந்து வருகிறது என கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் ரகசியமானவை. புலன் விசாரணை அதிகாரியின் ரகசிய அறிக்கையில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

தொடர்ந்து, பாமக வழக்கறிஞர் கே.பாலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, “ஆண்டுதோறும் இதுபோல் தொடர்வதால், அரிதான வழக்காக கருதி இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அல்லது சிபிஐக்கு வழக்கை மாற்ற வேண்டும். அரசே போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதில் இருந்து போலீஸ் - கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும் இடையில் தொடர்பு உள்ளது என்பது தெளிவாகிறது. அதனால் சுதந்திரமான அமைப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

சமய் சிங் மீனா மீண்டும் பணியமர்த்தப்பட்டது மக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது. அவருக்கு எதிரான விசாரணை முடிவுகளை அரசு வெளியிடவில்லை. அரசு அறிக்கையில், கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக எத்தனை காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கவில்லை. கர்நாடகா, புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்படுவதால், இதுகுறித்து சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும்” என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசு தரப்பு பதில் வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags :
Advertisement