கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் - உயிரிழப்பு எண்ணிக்கை 53ஆக உயர்வு!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 21 பேர் ஜூன் 19 அன்று உயிரிழந்தனர். இதேபோல ஜூன் 20 அன்று மேலும் 19 பேர் இறந்தனர்.
இதனிடையே, சேலம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டகளில் 15 பேர் நேற்று (ஜூன் 21) உயிரிழந்தனர். இதன்மூலம், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 90 நபர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 112 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் சந்திரா, சூசை, ரமேஷ் மற்றும் மதன்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.