கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் | 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைதான 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல் வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில், ஜூன் 18-ம் தேதி விஷச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியை ஒட்டியுள்ள கல்வராயன் மலையில் விஷச்சாராயம் காய்ச்சப்பட்டு, அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இந்தச் சூழலில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கல்வராயன் மலை பகுதி மக்களின் பொருளாதார சமூக மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாமாக முன் வந்து இந்த வழக்கை வழக்கு விசாரணைக்கு எடுத்துள்ளது.
தலைமைச் செயலாளர், மத்திய, மாநில பழங்குடியினர் நலத்துறை, டிஜிபி எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து டிஜிபி மற்றும் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைதான 11 பேரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி தரப்பில் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி என்கின்ற கோவிந்தராஜ் மனைவி விஜயா சகோதரர் தாமோதரன் மற்றும் சின்னதுரை ஜோசப் ராஜா சிவக்குமார் மாதேஷ் உள்ளிட்ட 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல் வழங்கப்பட்டுள்ளது.