கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம் | முக்கிய குற்றவாளிகள் 4 பேர் கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 21 பேர் நேற்று முன்தினம் (ஜூன் 19) உயிரிழந்தனர். நேற்று (ஜூன் 20) மேலும் 19 பேர் இறந்தனர்.
இதனிடையே, சேலம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டகளில் 15 பேர் இன்று (ஜூன் 21) உயிரிழந்தனர். இதன்மூலம், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்தது. இந்நிலையில் தற்போது 114 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள கண்டனம் தெரிவித்ததோடு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் மற்றும் உதவிகளையும் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தனிப்படை போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் சந்திரா, சூசை, ரமேஷ் மற்றும் மதன்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.