கள்ளக்குறிச்சி விவகாரம் - ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பிரேமலதா விஜயகாந்த் மனு!
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மனு அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 6 பெண்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை வருகின்றனர். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த மரணம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை நிகழ்வுகள் ஆரம்பித்த நாட்களில் இருந்தே அதிமுக தொடர் அமளியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்தியது. அதேபோல சிபிஐ விசாரணை கோரி அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து இன்று மனு அளித்தது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தார்.
இதன்பின்னர் ஊடகங்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்ததாவது..
”கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஏன் முதலமைச்சர் களத்தில் சென்று சந்திக்கவில்லை. 10 லட்ச ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினால் மட்டும் இந்த பிரச்னைக்கு தீர்வாகாது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மரக்காணம், விழுப்புரம் , செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற விஷச்சாராய மரணம் தொடர்பாக தமிழக அரசு தலையிட்டு தடுத்து இருந்தால் இன்று கள்ளக்குறிச்சியில் இது போன்ற சம்பவம் நடைபெற்று இருக்காது. திமுக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மற்றும் காவல்துறை உதவியுடன் தான் அங்கு கள்ளச்சாராயம் நடைபெற்று வருகிறது. எனவே இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்.”
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.