கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் - 2 டிஎஸ்பிக்கள் உள்பட 9 போலீசாருக்கு சிபிசிஐடி சம்மன்!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில், 2 டிஎஸ்பிக்கள் உள்பட 9 போலீசாருக்கு சம்மன் கொடுத்து விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மற்றும் புகர்ப் பகுதிகளில் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தியதில் கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 65 பேர் இன்றுவரை உயிரிழந்ததாக கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.
விஷச்சாராய விற்பனை மற்றும் அதில் தொடர்புடைய 21 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விசாரணையில், கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடந்து வருவது தெரியவந்தது. ஆனால் அதனை தடுக்க மதுவிலக்கு அமலாக்கப்பிரிவும், கள்ளக்குறிச்சி போலீசாரும் தவறிவிட்டதாக 2 டிஎஸ்பிக்கள் உள்பட 9 போலீசாரை தமிழக அரசு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கள்ளச்சாராய வழக்கு விசாரணை இடைநீக்கம் செய்யப்பட்ட போலீசார் மீது திரும்பி உள்ளது. கள்ளச்சாராய விற்பனை செய்வதை தெரிந்தே அங்குள்ள போலீசார் கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கைதான குற்றவாளி கண்ணுக்குட்டியிடம் காவல்துறையினர் மாமூல் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனால் போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 2 டிஎஸ்பிக்கள் உள்பட 9 போலீசாரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அனைவருக்கும் சம்மன் கொடுத்து தனித்தனியாக விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.