"கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை" - அமைச்சர் எ.வ. வேலு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இந்த சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவிலிருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டன.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தனர். நேற்று காலையிலிருந்து சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதில், பலரது நிலைமை மோசமாக இருப்பதால், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 28 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 103 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தை அமைச்சர்கள் எ.வ. வேலு, மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரிடம் நலம் விசாரித்து மருத்துவர்களிடம் அவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதையும் படியுங்கள் :நீட் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட விவகாரம்! குறைகிறது முதலிடம் பிடித்த 6 மாணவர்களின் மதிப்பெண்!
அப்போது பேசிய அமைச்சர் எ.வ. வேலு கூறியதாவது :
"கள்ளச்சாராய விவகாரத்தில் காவல் துறை மெத்தனமாக இருந்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் தவறு நடந்ததை நியாயப்படுத்த விரும்பவில்லை. கள்ளச்சாராயம் விற்பதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இறந்தோரின் உடல்கள் உடற் கூராய்வுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளோம். கள்ளச்சாராயம் தொடர்பான சம்பவத்தை அறிந்ததும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எங்களை அனுப்பி வைத்தார்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.