கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு - தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை எனக்கூறிய உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம், கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் மரணமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
ஆனால் இதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தனர். மேலும் அந்தந்த கட்சியின் சார்பில் தனித்தனியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
போலீசாருக்கு தெரியாமல் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை எனக்கூறிய நீதிமன்றம், தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்கவும் தமிழ்நாடு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் விஷ சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் அதன் விசாரணை முடிய கால தாமதம் ஆகும் என்றும், தமிழ்நாடு காவல்துறையே விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கட்டுமே, அதில் என்ன இருக்கிறது? என கேள்வி எழுப்பினர். அதற்கு, “ இந்த வழக்கில் காவல்துறையே ஏற்கனவே விசாரணையை முடித்து விட்டது” என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், “உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை. தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தளளுபடி செய்கிறோம்” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.