கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நீதிபதிகள் நேரில் ஆய்வு!
மதுரை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்விற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் முதன்முறையாக நேரில் ஆய்வு செய்தனர்.
கடந்த 18 ஆம் தேதியன்று சிவகங்கையை சேர்ந்த மணிகண்டன் மற்றும் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் சித்திரை திருவிழாவின் போது போதுமான அளவு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், மொபைல் மருத்துவ சேவைகளை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்து தரப்படுவதை உறுதிப்படுத்த உத்தரவிட கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, "மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளனவா? இது வரை சித்திரை திருவிழாவிற்காக என்னென்ன ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன? கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபத்தின் போது தேவையான பாதுகாப்பு, தடுப்பு அமைப்புகள் செய்யப்பட்டு உள்ளனவா?
சுவாமி, அம்மன் தேரோட்டத்தின்போது மின்கம்பிகள் தாழ்வாக இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. மாசி வீதிகளில் ஏன், மின் இணைப்பு கம்பிகளை பூமிக்கு அடியில் பதிக்க கூடாது? ஏன் இதற்கு நிரந்தர தீர்வு காண கூடாது?" என கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் உள்ளிட்ட விழாவிற்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து உயர்நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி சுரேஷ்குமார் மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதி, பக்தர்கள் தரிசிக்கும் பகுதி, வைகையாற்றிற்குள் பக்தர்கள் செல்வதற்காக கட்டப்பட்ட படிகட்டுகள், எதிர்சேவையின் போது பக்தர்களுக்கு ஏற்பாடுகள், தடுப்பு வேலிகள் அமைப்பது ஆகியவை குறித்தும் நேரில் ஆய்வுமேற்கொண்டதோடு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
மற்றும், வருவாய்துறை, காவல் துறை , மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
பல ஆண்டுகளாக சித்திரை திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் கடந்த ஆண்டு கள்ளழகர் சித்திரை திருவிழாவின் போது சட்ட ஒழுங்கு பிரச்னை மற்றும் பக்தர்கள் 4 பேர் நெரிசலில் சிக்கியும், தண்ணீரில் மூழ்கியும் உயிரிழந்தனர். ஒரு கொலை சம்பவமும் நடந்தேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த ஆண்டு விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் முதன்முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர்.