பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது - சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்
மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகார் மீது விரைவாக உரிய முறையில் நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி கண்ணன் தலைமையில் நிர்வாகத்தால் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் அறக்கட்டளையின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இடம்பெறக் கூடாது எனவும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் கல்லூரி மாணவிகள் ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி அனிதா சுமந்த், கலாஷேத்ரா-வுக்கு எதிரான பாலியல் தொல்லை புகார் விரும்பதகாதது மட்டுமின்றி மிகவும் கவலைக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.