For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கலைஞர் வீடு கட்டும் திட்டம் - நிதி வழங்க ஜி-பே மூலம் பணம் கேட்ட ஊராட்சி செயலாளர்!

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் நிதி வழங்குவதற்காக ஊராட்சி செயலாளர் லஞ்சம் கேட்பது குறித்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10:43 AM Aug 12, 2025 IST | Web Editor
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் நிதி வழங்குவதற்காக ஊராட்சி செயலாளர் லஞ்சம் கேட்பது குறித்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலைஞர் வீடு கட்டும் திட்டம்   நிதி வழங்க ஜி பே மூலம் பணம் கேட்ட ஊராட்சி செயலாளர்
Advertisement

Advertisement

சிதம்பரம் அருகே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் நிதி வழங்குவதற்காக ஊராட்சி செயலாளர் லஞ்சம் கேட்பது குறித்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள மேலதிருக்கழிப்பாலை ஊராட்சி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் செயல்படுகிறது. தற்போது, இந்த ஊராட்சியில் தலைவர் இல்லாததால், ஊராட்சி செயலாளர் கோபாலகிருஷ்ணன் நிர்வாகப் பொறுப்புகளை கவனித்து வருகிறார்.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சுமார் ஏழு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்டடப் பணி முடிந்த பின்பும் அரசு நிதி வழங்கப்படும். ஆனால், நிதி பெறுவதற்கு, ஊராட்சி செயலாளர் கோபாலகிருஷ்ணன் பயனாளிகளிடம் தொடர்ச்சியாகப் பணம் கேட்டு வந்துள்ளார். "அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்தால்தான் நிதியை வாங்கித் தர முடியும்" என்று கூறி, ஒவ்வொரு முறையும் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை பணம் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட பயனாளிகள் செய்வதறியாமல் தவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பயனாளிகளில் ஒருவரான வீரசுந்தரம், இந்தப் பிரச்சனை குறித்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதன் பேரில், பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (BDO) விசாரணை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பல மாதங்கள் கடந்தும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஊராட்சி செயலாளர் தனது செயல்களைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார். இதனைடுத்து, கோபாலகிருஷ்ணன் ஒரு பயனாளிக்கு ஜி-பே மூலம் பணம் கேட்ட ஆடியோ பதிவு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள், "அரசு நிதி வழங்குவதற்கு லஞ்சம் கேட்பது வருத்தமளிக்கிறது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், கடலூர் மாவட்ட நிர்வாகம் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பயனாளிகளுக்கு நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் நோக்கம் சிதைக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement