‘காதல் - தி கோர்’ படத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது!
மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்’ மலையாளத் திரைப்படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதை புதுச்சேரி அரசு வழங்குகிறது.
வித்தியாசமாக கதைக்களத்தில், ஜியோ பேபி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘காதல் தி கோர்’. இப்படத்தில் நடிகர் மம்மூட்டி, ஜோதிகா ஆகியோர் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் மம்மூட்டி, இப்படத்தில் தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருந்தார்.
உலகளவில் வெளியான இத்திரைப்படம், விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில் புதுச்சேரி அரசின் 2023-ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதை மலையாளத் திரைப்படம் ‘காதல் தி கோர்’ பெறுகிறது. திரைப்படத்தின் இயக்குநர் ஜியோ பேபிக்கு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கி கௌரவிக்கிறார்.
புதுச்சேரி செய்தி விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக்கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் சார்பில் இந்திய திரைப்படவிழா 2024 வரும் டிச.13-ம் தேதி தொடங்குகிறது.