“கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது” - இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம்!
கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின் போது, ஒப்பந்தம் போடப்பட்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது 1974-ஆம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் இலங்கைக்கு கச்சத்தீவு இந்தியாவால் வழங்கப்பட்டதா என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(ஆர்டிஐ) கீழ் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையிலெடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் கச்சத்தீவை காங்கிரஸ் தாரைவார்த்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், பிரதமர் மோடியின் x தளத்தில் பதிவிற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை!…
இந்த பரபரப்பான சூழலில், இலங்கை அமைச்சரவை கூட்டம் ஏப்.2 ஆம் தேதி நடைபெற்றது. அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும், தகவல் துறை அமைச்சருமான பண்டுலா குணவர்த்தன நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் கச்சத்தீவு விவகாரம் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பேசுபொருளானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘ இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் கச்சத்தீவு பற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை’ என்று பதிலளித்தார்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது :
"இந்திய மீனவர்கள் இழுவை மீன்பிடி படகுகளை பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன் பிடிக்கின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது; இலங்கை மீனவர்களின் கடற்தொழில் உபகரணங்களும் சேதப்படுத்தப்படுகின்றன. இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல் வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்"
இவ்வாறு இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்தார்.