3,500 கி.மீ. துாரம் சென்று தாக்கும் கே-4 ஏவுகணை சோதனை வெற்றி!
அணுஆயுதத்தை தாங்கிச் செல்லும் திறன்கொண்ட கே-4 ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
உலகில் மிகவும் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், அணு ஆயுத திறன் கொண்ட வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று விசாகப்பட்டினம் கடல் அருகே, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பலான ஐஎன்எஸ் அரிகாட்டில் இருந்து, அணுஆயுதத்தை தாங்கி செல்லும் திறன் கொண்ட கே-4 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக செய்தது இந்திய கடற்படை.
இந்த பாலிஸ்டிக் ஏவுகணை 3,500 கி.மீ., துாரம் சென்று இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது. ஐஎன்எஸ் அரிகாட்டில் இருந்து கே- 4 ஏவுகணை சோதனை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். ஐஎன்எஸ் அரிஹன்ட் மற்றும் அரிகாட் ஆகிய இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியக் கடற்படையில் உள்ளன. அவை பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தும் திறன் கொண்டவை. விசாகப்பட்டினத்தை தளமாகக் கொண்ட கப்பல் கட்டும் மையத்தில் அரிகாட் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அடுத்த ஆண்டில் இதுபோன்று மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.