ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா-கனடா உறவுகளை அழித்துவிட்டார் - இந்திய தூதா் சஞ்சய் வா்மா காட்டம்!
ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா-கனடா உறவுகளை அழித்துவிட்டார் என்று கனடாவுக்கான இந்திய தூதா் சஞ்சய் வா்மா தெரிவித்துள்ளாா்.
கடந்த ஆண்டு கனடாவில் உள்ள சா்ரே நகரில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரின் கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா்.
இதைத்தொடா்ந்து நிஜ்ஜாா் கொலை தொடா்பாக கனடாவுக்கான இந்திய தூதா் சஞ்சய் வா்மா உள்பட சில இந்திய தூதரக அதிகாரிகளிடம் முக்கிய தகவல்கள் உள்ளன என்று நம்புவதாக கனடாவின் ஆா்சிஎம்பி காவல் படை அண்மையில் குற்றஞ்சாட்டியது. இதன் மூலம் நிஜ்ஜாா் கொலையில் சஞ்சய் வா்மாவையும், பிற இந்திய தூதரக அதிகாரிகளையும் கனடா தொடா்புபடுத்தியது.
இந்தக் குற்றச்சாட்டுகளால் கடும் அதிருப்தி அடைந்த மத்திய அரசு, இந்தியாவில் இருந்து கனடா தூதா் மற்றும் அந்நாட்டின் 5 தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டதுடன், கனடாவில் இருந்து சஞ்சய் வா்மா மற்றும் 5 இந்திய தூதரக அதிகாரிகளை தாயகத்துக்கு திரும்ப அழைத்துக்கொள்வதாக அறிவித்தது. அத்துடன் கனடாவின் குற்றச்சாட்டுகளையும் மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.
இந்த விவகாரம் தொடா்பாக கனடா செய்தித் தொலைக்காட்சிக்கு சஞ்சய் வா்மா அளித்த பேட்டி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டது. அதில் அவா் தெரிவித்துள்ளதாவது:
நிஜ்ஜாா் கொலை தொடா்பாக பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டுகள் உறுதியான ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டதல்ல. கனடா உளவுத் துறை அளித்த தகவலின்படியே அந்தக் குற்றச்சாட்டை அவா் கூறியுள்ளாா். இதை அவரே அண்மையில் ஒப்புக்கொண்டாா். அவரின் குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்தியா-கனடா இடையிலான உறவை அவா் அழித்துவிட்டார் . நிஜ்ஜாா் கொலைக்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்றாா்.