61 நாட்களில் நீதி - சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு மரண தண்டனை!
மேற்கு வங்கத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்ற வழக்கில், 19 வயது இளைஞருக்கு மரண தண்டனை அளித்து வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பெரும் வரவேற்பறைப் பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸின் ஜெய்நகரில் கடந்த அக்.4ஆம் தேதி, 9 வயது சிறுமி டியூசன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, 19 வயது இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டார். இதனிடையே வெகுநேரம் குழுந்தையை காணாத பெற்றோர் ஜெய்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளியை 2.5 மணி நேரத்திற்குள் அடையாளம் கண்டு, போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தான் செய்த குற்றத்தை சர்தார் ஒப்புக்கொண்டு, பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் இருந்த இடத்தை கூறினார். இதையடுத்து, சிறுமியின் உடல் மீட்கப்பட்டு, முழுமையான விசாரணையை நடத்துவதற்காக 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.
இதனையடுத்து அக்.30ஆம் தேதி போக்ஸோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 25 நாட்களில் விசாரணை முடிக்கப்பட்டது. நவ.26ஆம் தேதி விசாரணையை முடிப்பதற்கு முன்பு, நீதிமன்றம் 36 சாட்சிகளிடம் சாட்சியம் கேட்டது. இறுதியாக, இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து பருய்பூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று முஸ்தகின் சர்தார் மற்றும் நீதிபதி சுப்ரதா சாட்டர்ஜிக்கு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இந்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ரூ.5000 அபராதமும், மரண தண்டனையும் விதித்து உத்தரவிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டனர்.
ஆர்ஜிகர் மருத்துவமனை வழக்கு தொடர்பான போராட்டங்கள் இன்னும் தொடரும் நிலையில், இந்த சம்பவம் கொல்கத்தாவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் சிறுமியின் குடும்பத்தினரும் சர்தாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். குற்றம் நடந்து 61 நாட்களுக்குள் தண்டனை வழங்கப்பட்டது தற்போது இந்தியாவில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.
கொல்கத்தா சம்பவத்திற்கு பிறகு, உயிரிழப்புக்கு வழிவகுக்கும் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் விதமாகவும், பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுட்காலம் முழுவதும் சிறைத் தண்டனை அனுபவிக்கும் வகையிலும் புதிய சட்ட மசோதா மேற்கு வங்கத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.