"நடிகை பாலியல் வழக்கில் நீதி முழுமையடையவில்லை.. சுதந்திரமாக இருக்கிறார்கள்" - நடிகை மஞ்சு வாரியர்
கேரளா மாநிலத்தில் பிரபல நடிகை கடந்த 2017 ஆம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 12 ஆம் தேதி எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பல்சர் சுனில் 6 பேருக்கு 20 வருடங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரான நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டார். இந்த தீர்ப்பை சிலர் ஆதரித்தும், எதிர்த்தும் வருகின்றனர்.
இந்த சூழலில், பிரபல மலையாள நடிகையும், நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியுமான மஞ்சு வாரியர் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,
"மரியாதைக்குரிய நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். ஆனால் இந்த விஷயத்தில் முழுமையாக நீதி கிடைக்கவில்லை. ஏனென்றால் குற்றம் செய்தவர்கள் மட்டுமே இப்போது தண்டிக்கப்பட்டுள்ளனர். இதைத் திட்டமிட்டவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பது ஒரு பயமுறுத்தும் உண்மை. அவர்கள் தண்டிக்கப்படும்போதுதான் உயிர்வாழ்வதற்கான நீதி முழுமையடையும். இது நான் உட்பட சமூகத்தின், காவல்துறை மற்றும் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும். இது அவளுக்கு மட்டுமல்ல. இது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் உரியது. பணியிடத்திலும், தெருக்களிலும், வாழ்க்கையிலும் பயமின்றி தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய சூழ்நிலை அவர்களுக்கு இருக்க வேண்டும்"
இவ்வாறு மலையாள நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்தார்.