#JuniorAsiaCupHockey | இந்தியா - தாய்லாந்து அணிகள் இன்று மோதல்!
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா - தாய்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
21 வயதுக்கு உட்பட்டோருக்கான 10வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நேற்று (நவ.26) தொடங்கியது. இந்த போட்டி டிசம்பர் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென் கொரியா, ஜப்பான், சீனதைபே, தாய்லாந்தும், 'பி' பிரிவில் பாகிஸ்தான், மலேசியா, வங்காளதேசம், ஓமன், சீனாவும் இடம் பிடித்துள்ளன.
இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அதனுடன், அடுத்த ஆண்டு நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும்.
இதில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் இன்று (நவ.27) தாய்லாந்தை சந்திக்கிறது. போட்டியை வெற்றியுடன் தொடங்க இந்திய அணி முனைப்பு காட்டும். அதேநேரத்தில் முதல் ஆட்டத்தில் தென்கொரியாவிடம் வீழ்ந்த தாய்லாந்து அணி வெற்றி கணக்கை தொடங்குவதற்கு போராடும். இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.