ஜூனியர் மகளிர் T20 உலகக்கோப்பை | வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
2வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுடன் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் நிக்கி பிரசாத் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 13.2 ஓவர்களில் 44 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் 2 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை தொட்டனர். அதிகபட்சமாக கெனிகா கசார் 15 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் பருனிகா சிசோடியா 3 விக்கெட்டுகளும், ஜோஷிதா மற்றும் ஆயுஷி சுக்லா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 45 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கிறது. தொடர்ந்து, இந்திய அணி 4.2 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 47 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் சானிகா சால்கே 18 ரன், கமலினி 16 ரன் எடுத்தனர். இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 21ம் தேதி மலேசியாவை எதிர்கொள்கிறது.