ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி அணி ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!
14வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை போட்டி கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. இறுதிகட்டத்தை எட்டிய இதில் நேற்று இரவு நடைபெற்ற சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணி, ஸ்பெயின் அணியை 3-2 என்ற கணக்கில் பெனால்டி முறையில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. முன்னதாக மாலை நடைபெற்ற வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றது.
இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”உற்சாகம். திறமை. வீரியம். இதுவே சாம்பியன் குணம். ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனிக்கு வாழ்த்துகள். விடாமுயற்சியுடன் போராடிய ஸ்பெயினுக்குப் பெரும் பாராட்டுக்கள். தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா மற்றும் அர்ஜென்டினாவுக்கு முழு மரியாதை. உலகத் தரம் வாய்ந்த விருந்தோம்பல், விளையாட்டுத் திறனை வளர்க்கும் ஒரு செழிப்பான சூழல் அமைப்பு ஆகியவற்றின் மூலம் தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை தனது உலகளாவிய திறனை நிரூபித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.