ஜூனியர் ஆசிய கோப்பை : ருத்ர தாண்டவம் ஆடிய சூர்யவன்ஷி, முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா...!
12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டிகள் வரும் வருகிற 21-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இத்தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன் படி 'ஏ' பிரிவில், இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா ஆகிய அணிகளும், 'பி' பிரிவில், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, மலேசியா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
தொடக்க நாளான இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா- யுஏஇ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற யுஏஇ பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 433 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டகாரரான வைபவ் சூர்யவன்ஷி 171 ரன்கள் விளாசினார்.
இதனை தொடர்ந்து 434 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய யுஏஇ அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் 234 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும் இந்திய அணி தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் வைபவ் சூர்யவன்ஷி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மறுபுறம் நடைபெற்ற தொடரின் இரண்டாவது ஆட்டத்தில், மலேசியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இலக்கை விரட்டி களமிறங்கிய மலேசிய அணி, 19.4 ஓவர்களிலேயே 48 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் 297 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றது.