For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குடும்பத் தலைவிகளின் பொருளாதார பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்றம் கருத்து!

11:34 AM Jul 12, 2024 IST | Web Editor
குடும்பத் தலைவிகளின் பொருளாதார பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்றம் கருத்து
Advertisement

குடும்பத் தலைவிகளின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய கணவனும், மனைவியும் இணைந்து கூட்டு வங்கிக் கணக்கை வைக்கலாம் அல்லது ஒரே ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

Advertisement

குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 125-இன்கீழ், விவாகரத்தான இஸ்லாமிய பெண்கள் முன்னாள் கணவரிடம் பராமரிப்பு தொகையை பெறலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து அனைத்து மதத்தை சேர்ந்த பெண்களுக்கும் இந்த தீர்ப்பு பொறுந்தும் என நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் புதன்கிழமை தனித் தனியாக தீர்ப்பு அளித்தனர்.

அப்போது பேசிய நீதிபதி நாகரன்தா, “சமூகக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டுமெனில் ஒவ்வொரு குடும்பத்தின் முதுகெலும்பாக செயல்படக்கூடிய குடும்பத் தலைவிகளை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வது மிகவும் அவசியமாகும்.

இந்தியாவில் திருமணமான பல பெண்களிடம் தனி வருமானம் என ஏதும் இல்லை. அவர்கள் தங்களின் தேவைகளுக்கு குடும்பத்தினரிடம் கேட்டு பணத்தைப் பெற வேண்டிய சூழல் உள்ளது. அவர்களுக்கு நிதிச் சுதந்திரம் இல்லை. திருமணமாகிவிட்டால் கணவருடனோ அல்லது கணவரின் குடும்பத்தினருடனோ பெண்கள் தங்க வேண்டும் என்பது இந்திய கலாசாரத்தின் முறையாக உள்ளது.

திருமணமாகி தன்னை நம்பி வந்த மனைவி உணர்வுபூர்வமாக மட்டுமின்றி, நிதி ரீதியாகவும் தன்னையே சார்ந்திருக்கிறாள் என்பதை கணவர்கள் புரிந்துகொள்வதில்லை. குடும்பத்தினரின் நலனுக்காக நாள்தோறும் உழைக்கும் பெண்கள், கணவரிடம் எதிர்பார்ப்பது அன்பு மற்றும் பாசம் மட்டுமே. கணவரின் குடும்பத்தினரும் தன்னுடைய உணர்வுகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதே பெண்களின் சிறிய எதிர்பார்ப்பு.

ஆனால், பல குடும்பங்களில் பெண்களுக்கு இது கிடைப்பதில்லை. தனக்கென்று தனியாக வருமானம் ஈட்ட முடியாத மனைவியின் கவலைகளை கணவர் புரிந்துகொள்ள வேண்டும். குடும்பத்துக்காக மேற்கொள்ளப்படும் செலவுகள் அல்லாமல் அவர்களுக்கென்று தேவைப்படும் தனிப்பட்ட செலவுகளுக்கு தேவையான பணத்தை சற்றும் யோசிக்காமல் கணவர் வழங்கி, அவர்களுக்கு நிதிச் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை அளிக்க முன்வர வேண்டும்.

இதைச் செயல்படுத்த வேண்டுமெனில் கணவனும், மனைவியும் இணைந்து கூட்டு வங்கிக் கணக்கை வைக்கலாம் அல்லது ஒரே ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாம். அப்போதுதான் வலுவான தேசத்தையும் நம்மால் கட்டமைக்க முடியும். பெண்களுக்கு குடும்பத்திலும், சமூகத்திலும் உரிய மரியாதை கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement