அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் மாற்றமா? ஜோ பைடன் விளக்கம்!
‘அமெரிக்க அதிபர் 2024’ தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் தொடர்வதாக அவரது சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
குடியரசு கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் உடன் அதிபர் தேர்தலுக்கான முதல் விவாதத்தில் கடந்த வாரம் பைடன் பங்கேற்றார். இதில் ட்ரம்ப் அதிரடி பாணியில் பேசினார். பைடன் சற்று அமைதி காத்தார்.
இந்த விவாதத்தின் போது ட்ரம்புக்கு பைடன் பதிலடி கொடுக்க முயற்சித்தார். இருந்தும் அவர் பேச முயன்ற போது தடுமாறினார். அது நேரலையில் பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி தந்தது.
மேலும், ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களுக்கு சங்கடமாக அமைந்தது. இதையடுத்து வேட்பாளர் பைடன் மாற்றப்படலாம் என்றும் சொல்லப்பட்டது. அந்த நாட்டு அதிபர் தேர்தலில் ஒரு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர், தானாக போட்டியில் இருந்து விலகினால் மட்டுமே மாற்று வேட்பாளரை கட்சி அறிவிக்க முடியும் என்ற சூழல் உள்ளது கவனிக்கத்தக்கது. இந்த சூழலில் பைடன் தரப்பில் இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது.
அதில் “உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஜனநாயக கட்சியின் வேட்பாளார் நான் தான். நான் போட்டியில் நீடிக்கிறேன். யாரும் என்னை விலகும்படி சொல்லவில்லை. நானும் இதிலிருந்து வெளியேறவில்லை. இறுதிவரை போட்டியில் இருப்பேன். இந்த தேர்தலில் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். நவம்பரில் ட்ரம்பை வீழ்த்த எனக்கும், கமலா ஹாரிஸுக்கும் உதவுங்கள்” என அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
JUST IN: Email sent out by the Biden campaign pic.twitter.com/ao3ppVWQhy
— The Spectator Index (@spectatorindex) July 4, 2024