அமெரிக்க அதிபர் போட்டியிலிருந்து விலகிய ஜோ பைடன்... கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக பரிந்துரை!
நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19-ம் தேதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.
ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கினார். பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டதுடன் டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் பேசுவதற்கு மிகவும் தடுமாறினார். மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்றும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை டிரம்ப் என்றும் தவறுதலாக கூறினார்.
இவை ஜனநாயக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி அவர் அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார் என்றும் அவர் போட்டியிட வேண்டாம் என்றும் ஜனநாயக கட்சியினர் விருப்பம் தெரிவித்தனர். எனவே கமலா ஹாரிசை ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளாரக நியமிக்க ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
— Joe Biden (@JoeBiden) July 21, 2024
இது தொடர்பாக பைடன் தனது எக்ஸ் பக்கத்தில், எஞ்சியிருக்கும் எனது பதவிக் காலம் முழுவதும் அதிபராக தனது கடமைகளில் முழு ஆற்றலையும் செலுத்த முடிவு செய்துள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும், 2020ஆம் ஆண்டு துணை அதிபர் வேட்பாளார் தேர்வுல் தனது முதல் முடிவு கமலா ஹாரீஸ் தான் என்றும் அது தான் எடுத்த சிறந்த முடிவு. இந்த ஆண்டும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரீஸ் தொடர தனது முழு ஆதரவையும் ஒப்புதலையும் வழங்க விரும்புகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் ஜனநாயக கட்சியின் தொண்டர்கள் ஒன்று கூடி டிரம்பை தோற்கடிக்க வேண்டிய நேரம் இது, அதை அனைவரும் செய்வோம் என தெரிவித்துள்ளார்.