கமலா ஹாரிஸ் பெயருக்கு பதிலாக டிரம்பின் பெயரை உச்சரித்த ஜோபைடன் - அதிருப்தியில் ஜனநாயக கட்சி!
கமலா ஹாரிஸ் பெயருக்கு பதிலாக டிரம்பின் பெயரை உச்சரித்த பைடனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதால் ஜனநாயக கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிட களத்தில் உள்ளனர். அதிபர் தேர்தலில் 79 வயது டொனால்ட் டிரம்ப்பை 81 வயதாகும் ஜோ பைடன் எதிர்கொள்கிறார்.
ஜோ பைடனுக்கும், டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே முதன்முறையாக கடந்த வாரம் நேரடி விவாதம் நடைபெற்றது. ஆப்கனிலிருந்து அமெரிக்க படை வெளியேறியது மற்றும் பணவீக்கம் குறித்து அதிபர் பைடனை டிரம்ப் கடுமையாக தாக்கி பேசினார். இந்த விவாதங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
இதனை அடுத்து அதிபர் பைடன் அடுத்து பேசுவார் என்றும் அவர் டிரம்ப் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து காரசாரமாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பைடன் தடுமாறியதால், ஜனநாயக கட்சியினர் பைடனுக்கு பதிலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸை தேர்தலில் போட்டியிடச் செய்ய வேண்டும் கோரிக்கைகள் வைத்ததாக தகவல் வெளியானது.
மீண்டும் அதிபராகும் முயற்சியை கைவிடுமாறு பைடனை வலியுறுத்தி ஜனநாயக கட்சி எம்பிக்கள் 25பேர் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. பென்சில்வேனியாவுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் சம்மர் லீ வெளியிட்ட அறிக்கையில், அதிபர் ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடுவதைக் கைவிட்டால் அவருக்குப் பதிலாக கமலா ஹாரிஸ் தான் டிரம்ப்பை எதிர்த்து களமிறக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே வயது மூப்பு காரணமாக ஜோ பைடனின் பேச்சு குளறுவதாக குற்றஞ்சாட்டப்படும் சூழலில், தேர்தலில் அவர் போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை அதிக வயதில் அவரால் எதிர் வேட்பாளரை எதிர்த்து முழு திறனுடன் பிரசாரம் செய்ய முடியுமா என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டது.
🔥🚨BREAKING: Unreal! Joe Biden just called Donald Trump his Vice President. pic.twitter.com/eHXLpLIvFz
— Dom Lucre | Breaker of Narratives (@dom_lucre) July 11, 2024
இதனைத் தொடர்ந்து டிரம்புடன் முதன்முறையாக கடந்த வாரம் நடைபெற்ற நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் பைடன் மிகவும் தடுமாறினார். பேச வார்த்தைகள் இல்லாமல் நீண்ட நேரம் யோசித்தது, புரியாமல் பேசியது, அர்த்தமில்லாமல் பதிலளித்தது போன்ற ஜோ பைடனின் செயல்கள் அவர் மீதான அதிருப்தியை ஜனநாயகக் கட்சியினரின் ஒரு பிரிவினரிடையே ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ’பிக் பாய்’ கான்பிரன்ஸில் பேசிய ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோபைடன் " டிரம்பை துணை அதிபர் பதவிக்கு நான் தேர்வு செய்யவில்லை. ஏனெனில் அவர் துணை அதிபராக இருப்பதற்கு தகுதியற்றவர்.” எனப் பேசினார். இது ஜனநாயக கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து துணை அதிபர் தகுதி குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது இதற்கு பதிலளித்த பைடன் “ கமலா ஹாரிஸ் அதிபராக தகுதியுடையவர், பெண்களின் உடல் சுதந்திரம் குறித்த விவகாரத்தில் அவரது அணுகுமுறை சிறப்பாக இருந்தது ” என தெரிவித்தார்.